Wednesday, 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Meenam

வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். 
இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து சின்னச் சின்ன தடைகளையும் அவ்வப்போது உடல் நலக் குறைகளை தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் சனிபகவான் தந்தார். இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள கால கட்டங்களில் 8ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். 

குடும்பத்தில் கணவன்&மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். நேரம் கெட்ட நேரத்தில் பயணிக்க வேண்டாம். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். முன்பின் அறியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. 

மகனின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிவரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வர வேண்டிய பூர்வீக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னால் இகழ்ந்து பேசுவார்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். 

மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். அறுவை சிகிச்சை உண்டு. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையையும் உட்கொள்ள வேண்டாம். 

சகோதரர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப் பாருங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் எதிலும் தடுமாற்றமும் வீண் செலவுகளும் வந்துபோகும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைப் பயிற்சியும் இருக்கட்டும்.     

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்உங்கள் தனாதிபதியும்&பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியான வேலைகள் முடியும். குழந்தை பாக்யம் உண்டு. தாமதமானாலும் எதிர்பார்த்த பணம் வரும். 
புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்கள் தங்கள் தவறை உணருவார்கள். 

புது வேலை கிடைக்கும். ஆனால் தந்தையாருடன் மனஸ்தாபங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். பணம் வந்தாலும் சேமிப்புகள் கரையும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் சிறுசிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஒற்றைத் தலைவலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து செல்லும்.   


9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். கெட்ட நண்பர்களை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள் ஆனால் கவனமாகக் கையாளுங்கள். வாகனப் பழுதை சரி செய்யுங்கள். அயல்நாடு மற்றும் புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.  


12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் ராசிநாதனும்&ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் தடைபட்ட திருமணம் கூடிவரும். சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். வீடு மாறுவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் செலுத்திவிடுவது நல்லது. உறவினர்களுடன்பகைமை வரக்கூடும். மஞ்சள் காமாலை, காய்ச்சல் வந்து நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். 


சனிபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.  பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.  இல்லத்தரசிகளே! குடும்பத்தில் பெரிய முடிவெல்லாம் இனி நீங்கள்தான் எடுக்க வேண்டி வரும். ஆனால் கணவர் அவ்வப்போது கடிந்து கொள்வார். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து கவலைகள் தலைதூக்கும். மாமியார் உதவுவார். அலுவலகம் செல்லும் பெண்களே! விளையாட்டாகப் பேசி வம்பில் சிக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! 

தோழியின் திருமணத்திற்கு செல்லும் போதெல்லாம் உனக்கு எப்பொழுது கல்யாணம் என்று கேள்வி கேட்டு 
கிண்டலடித்தார்களே! திருமணம் முடியும். தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறு நீங்கும். மாணவ&மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். வியாபாரிகளே! தாராளமாக முதலீடு செய்து, விசாலமாக கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டது தான் மிச்சம். 

இனியாவது ஆழம் தெரிந்து கால் வையுங்கள். வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.  உத்யோகஸ்தர்களே! நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

 உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.  அரசியல்வாதிகளே! வீண் வறட்டு கௌரவத்திற்காக கை காசை தண்ணியாக இறைக்காதீர்கள். கட்சி மேலிடம் உங்களின் செயல்களை உற்றுநோக்கும். கலைத்துறையினர்களே! 

விமர்சனங்களையும் வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிடவேண்டிவரும். 
விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த தரமற்ற உரங்களை பயன்படுத்தாதீர்கள். லோன் தாமதமாகி கைக்கு வரும்.
இந்த சனி மாற்றம் செலவுகளிலும் பிரச்னைகளிலும் சிக்க வைத்தாலும் கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகிலுள்ள மொரட்டாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் பஞ்சலோக சனீஸ்வரரை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

No comments:

Post a Comment