Friday, 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Thulam


மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடையும் நீங்கள், தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். அடக்கு முறைக்கும் ஆணவத்திற்கும் அடிபணியாத நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். 

உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். புதன் சாதகமாக இருப்பதால் வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். 


இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து காற்றோட்டம், தண்ணீர் வசதி அதிகமுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர், வீட்டில் குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள் தீரும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று இனத்தவர்களின் ஆதரவு கிட்டும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 


16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். 

பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தை கூடிவரும். மூத்த சகோதரிக்கு கல்யாணம் நடக்கும். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் 8ம் வீட்டில் மறைவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்துபோகும். 
ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் அநாவசியப் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். 

சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொள்வீர்கள். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். ரத்த அழுத்தம், சளித் தொந்தரவு, இனந் தெரியாத கவலைகள் வந்துநீங்கும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். வருடம் பிறக்கும் போது 2ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். 

சில நேரங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப்போய் அது விபரீதமாக முடியும். குடும்பத்தில் சின்ன சின்ன கூச்சல் குழப்பங்கள் வந்துபோகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். கேது 8ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். கை, காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.

 
1.12.2012 முதல் உங்கள் ராசிக்குள் ராகுவும் 7ல் கேதுவும் நுழைவதால் மனக்குழப்பம், எதையோ இழந்ததைப்போல் ஒரு வித கவலைகள், பதட்டம், தலைச்சுற்றல், பல்வலி வந்து நீங்கும். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும்.
ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் வரத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். 

உங்கள் யோகாதிபதி சனிபகவான் உச்சமாகி ராசிக்குள் அமர்வதால் பணம் வரும். மழலை பாக்யம் உண்டு. ஆனால்  யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனத்தை இயக்கும் முன் பிரேக்கை சரிபாருங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். 
சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் சற்றே அலைச்சலும் சுபச் செலவுகளும் வரும். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். 

அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வீண் பழியில் சிக்கிக்  கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். முகப்பரு, பசியின்மை, ஹார்மோன் கோளாறுகள் வந்து நீங்கும். காய், கனிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் விருப்பப்படி திருமணம் முடியும். 
மாணவர்களே! புத்தகத்தை தொட்டாலே தூக்கம் வந்ததே! இனி உற்சாகமாகப் படிப்பீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசும் பாராட்டும் உண்டு. 


வியாபாரிகளே! முதலீடுகள் அதிகமிட்டு விழிபிதுங்கி நின்றீர்களே, இரவு பகலாக உழைத்தும் லாபம் பார்க்க முடியவில்லையே, கவலை வேண்டாம். இனி அந்த நிலை மாறும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை புதுப்பிப்பீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரம் அறிந்து புதிய சரக்குகளை கொள்முதல் செய்யுங்கள். வியாபார நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். 

ரியல் எஸ்டேட், கண்ணாடி, துணி, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த பிணக்கு விலகும். உத்யோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் பகையை மறந்து இனி உங்களுக்கு உதவுவார். நெடுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். சம்பளம் கூடும். 


பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடிவரும். கணினி துறையினருக்கு வேறு நிறுவனங்களிலிருந்து புது வேலை கிடைக்கும். 
அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். கலைத்துறையினரே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.  அவ்வப்போது வீண் வதந்திகளும் வரக்கூடும். புது வாய்ப்புகள் தேடிவரும். விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகில் வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். இந்தப் புத்தாண்டு எடுத்த காரியங்களை 
முடித்துக் காட்டும் வல்லமையையும் வசதி  வாய்ப்புகளையும் தருவதாக அமையும். 
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அஷ்டபுஜ காளியை அஷ்டமி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Kanni


எறும்பைப்போல் சுறுசுறுப்பும் எதுகை, மோனையான பேச்சும் சிந்தனை ஆற்றலும்,பகுத்தறிவுத் திறனும் கொண்ட நீங்கள், நல்ல நிர்வாகியாகவும் திகழ்வீர்கள்.   உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் 5ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். இதுவரை வராமல் வெளியில் நின்ற தொகை கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். மனைவி வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளுக்காக சொத்து சேர்ப்பீர்கள்.

 
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதியிலேயே நின்றுபோன வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உங்கள் ராசியை சந்திரன் பார்ப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். எதிலும் ஆர்வம் பிறக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் குரு மறைந்திருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். என்றாலும் சமாளிப்பீர்கள். சிலரால் வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள், எச்சரிக்கை தேவை.

  
17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும்.  குழந்தை வரம் வேண்டி கோயில் கோயிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம்; அழகான வாரிசு உண்டாகும். 


புது வேலைக்கும் முயற்சி செய்தீர்களே! இதைவிட அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாடு பயணம் 
சாதகமாக அமையும்.        

    
செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 12ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். 


வருடம் பிறக்கும்போது உங்கள் ராசிக்கு 3ல் ராகு அமர்ந்திருப்பதால் புதுச் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மதம், மொழி, இனத்தவரால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 


9ம் வீட்டில் கேது நிற்பதால் தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் பேச்சில் தடுமாற்றம், விரக்தி, ஏமாற்றம் வந்து போகும். யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். 


சனிபகவான் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். ஆனால், யோகாதிபதி சனி உச்சமாகி அமர்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும்.  சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். 


ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பார்வைக் கோளாறு, பல் வலி வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்டதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 


சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக  அமர்வதால் இக்கால 
கட்டத்தில் மனஇறுக்கம், ஏமாற்றம், வீண் விரயம், ஒருவித படபடப்பு, நம்பிக்கையின்மை வந்துபோகும்.கன்னிப் பெண்களே! தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். இனி உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமைவார். விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். முகப்பரு, தோலில் நமைச்சல், கனவுத் தொல்லை வந்து நீங்கும்.


மாணவர்களே! படிப்பைத்தவிர மற்றதில் கவனம் செலுத்த வேண்டாம். பெற்றோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். 
வியாபாரிகளே! தொழிலில்  போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மே, ஜூன், ஜூலை, நவம்பர் மாதங்களில்  திடீர் திருப்பங்களும் அதிரடி லாபங்களும் உண்டாகும். 

கடையை வசதியான இடத்திற்கு மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். ஹோட்டல், புரோக்கரேஜ், கமிஷன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய பங்குதாரர்களையும் 
சேர்ப்பீர்கள். உத்யோகஸ்தர்களே! உங்களைவிட தகுதி குறைந்தவருக்குக்கூட பதவி உயர்வு கிடைத்ததே! சம்பள உயர்வு இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்களே! 

இனி இந்த அவலநிலை மாறும். எல்லோரும் மதிப்பார்கள். ஏழரைச் சனி இருப்பதால் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மூத்த அதிகாரிகளைப் பற்றி குறை கூறாதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். அநாவசியமான விடுப்புகளை இனி குறையுங்கள். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். கணினி துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் வரும். என்றாலும் யோசித்து ஏற்பது நல்லது.


அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தெரிவியுங்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் மதிப்பு கூடும். கலைத்துறையினரே! ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள். வருமானம் உயரும். விவசாயிகளே! வங்கியில் கடன் கிடைக்கும். அவ்வப்போது வீண் செலவுகளை வைத்த மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள்.இந்தப் புத்தாண்டு தத்தளித்துக் கொண்டிருந்த உங்களை தலை நிமிர வைப்பதுடன்  புகழையும் பணத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை-மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்கு தும்பைப் பூ மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Simham


காய்த்த மரம் வளைந்து நிற்கும்; கல்லடியும்படும் என்பதை அறிந்த நீங்கள், ஏச்சுப் பேச்சுக்கள் எத்தனை வந்தாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டீர்கள். தன்மானம் மிக்க நீங்கள், தலைவனாக இருந்தாலும் தவறு செய்துவிட்டால் தட்டிக் கேட்கத் தயங்கமாட்டீர்கள். 
உங்கள் யோகாதிபதி செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் இனி வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள். வாடிய முகம் மலரும். 

சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய சொந்த-பந்தங்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பிள்ளைகளிடமிருந்த பிடிவாத குணம் நீங்கும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்களுக்கு 8வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். 

குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். சுக்கிரன் 6ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 16.5.2012 வரை குருபகவான் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பணப்
புழக்கம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சொத்து வாங்க பாதி பணம் தந்து மீதி பணம் தேடினீர்களே! இனி அது கிடைக்கும். 

நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையாரின் உடல் நிலை சீராகும். பேச்சு வார்த்தையில்லாமல் தனித்திருந்த அப்பா இனி உங்களுடன் சேர்ந்து கொள்வார். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப் பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். நாடாளுபவர்கள் உதவுவார்கள்.

 
கோயில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால் எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள். அடுத்தவர்களை விமர்சித்துப் பேசுவதை நிறுத்துங்கள். வறட்டு கௌரவத்திற்காக ஆடம்பரச் செலவுகள் செய்து கொண்டிருக்காதீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். 

பிள்ளைகளின் நட்பு வட்டங்களை கண்காணியுங்கள். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். அவசரப்பட்டு வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டாம். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம். செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை ராசிக்குள்ளேயே வக்ரமாகி நிற்பதால் சில நேரங்களில் எதிலும் ஆர்வமில்லாமல் போகும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான 
வீடுகளில் செல்வதால் மனஇறுக்கம் விலகும். 


புத்துணர்ச்சி பெருகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்னைகள் நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகு 4ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள், மூட்டுவலி வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் மீண்டும் தலை தூக்கும். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். கேது 10ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, உத்யோகத்தில் வேலைச்சுமை, ஒருவித படபடப்பு, கண் எரிச்சல், ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். 

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது மனதை வாட்டும். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் நுழைவதால் வழக்கு விரைந்து முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவியுண்டு. தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும்.


சனிபகவான் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள். வேற்றுமதத்தினர், மொழியினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும். ஆனால், சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் பாதச் சனியாக அமர்வதால் சிறுசிறு விபத்துகள், குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். 

  
கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும். மாதவிடாய்க் கோளாறு, தலைச்சுற்றல், தூக்கமின்மை நீங்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மாணவர்களே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். கணிதம், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். நல்ல நட்புச் சூழல் உருவாகும். 


வியாபாரிகளே! சந்தை நிலவரம் அறிந்து புது கொள்முதல் செய்வீர்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுபடுத்தி அழகு
படுத்துவீர்கள். ஹோட்டல், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி, மர வகைகளால் அதிக லாபமடைவீர்கள். அனுபவமுள்ள வேலையாட்கள் அமைவார்கள். சிலரை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். புதிதாக முதலீடு செய்யலாம். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். பங்குதாரர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். உங்களிடத்தில் முற்பகுதியில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.    


உத்யோகஸ்தர்களே! உங்களை அலட்சியப் படுத்திய மேலதிகாரியின் மனம் மாறும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலகப் பிரச்னைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்த பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். சம்பளம் உயரும். பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்னச் சின்ன விசாரணைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும். கணினி துறையினருக்கு பதவி உயரும். 


அரசியல் வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள்.  கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  விவசாயிகளே! தண்ணீர் கிடைக்கும். மகசூல் பெருகும். வீட்டில் நல்லது நடக்கும். இந்தப் புத்தாண்டு தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட வைத்து சவால்களில் வெற்றி பெற வைப்பதாகவும் அமையும். 
பரிகாரம்:
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வியாழக் கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். பழுதடைந்த பள்ளியை புதுப்பிக்க உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Kadakam


வீடு-வாசல் என்று அடங்கி விடாமல், நாடு-நகரம் என யோசிப்பவர்களே! ஆர்ப்பாட்டம் செய்யாமல் அகிம்சை வழியில் சென்று நினைத்ததை அடையும் நீங்கள், எதிரியின் உணர்வுக்கும் மதிப்பளிப்பவர்கள். ஆறாவது அறிவுக்கு அடிக்கடி வேலைதரும் நீங்கள், நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். 
உங்கள் 9வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். 


வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொடர்வதால் அதுவரை நான்கைந்து வேலைகளை ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டியது இருக்கும். உத்யோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும் இடமாற்றங்களும் வரக்கூடும். 


எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களிடம் கேட்டால் மட்டும் ஆலோசனையோ, கருத்தோ சொல்லுங்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டிவரும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். 
குடும்ப விஷயங்களை நெருங்கியவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதிய நண்பர்களை வீடுவரை அனுமதிக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனதை வாட்டும். 

ஊர் பொது விவகாரங்களில் உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வீர்கள். வங்கிக் காசோலைகளில் முன்பே கையெழுத்திட வேண்டாம். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. ஏதோ ஒன்றை இழந்ததைப்போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் கல்யாணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் 
கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். 

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். செவ்வாய், வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 2ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புது சொத்து வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று வர விசா கிடைக்கும். 

சகோதர, சகோதரிகள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வருடம் பிறக்கும்போது ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். ஒற்றைத் தலைவலி, ரத்த சோகை, மூட்டு வலி வரக்கூடும். தாய்மாமன், அத்தை வகையில் செலவுகள் வந்துபோகும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11ம் வீட்டில் தொடர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். 

பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் ராகுவும் 10ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர், நண்பரை இழக்க நேரிடும். வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்கள் சுக ஸ்தானமான 4ம் வீட்டிலேயே தொடர்வதால் நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாருக்கு சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். 


யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வேற்றுமதத்தினர்கள் உதவுவார்கள். இலவசமாக அறிமுகமாகும் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. கன்னிப்பெண்களே! தடைபட்ட படிப்பை முடிக்க முடியாமல் திணறினீர்களே! எந்த பாடப் பிரிவிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இந்த ஆண்டில் படிப்பை முடிப்பீர்கள். 

வருடப் பிற்பகுதியில் நல்லவேலையும் கிடைக்கும். காதல் தோல்வியால் கலங்கியிருந்தீர்களே! இனி பெற்றோர் பார்க்கும் வரன் உங்களுக்கும் பிடித்தமாக இருக்கும். மாணவர்களே! கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களை விட்டு பிரிவீர்கள். மதிப்பெண் கூடும். போராடி புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். வியாபாரிகளே! மார்ச் மாதத்திலிருந்து கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று தொந்தரவு தருவார்கள். 


8.5.2012லிருந்து பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வரவேண்டிய பாக்கிகளையும் வசூலிப்பீர்கள். புது சலுகை திட்டங்கள் மூலம் புது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதுக் கிளைகள் தொடங்கும் வாய்ப்பும் வரும். ஹோட்டல், கமிஷன், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். 


உத்யோகஸ்தர்களே! 16.5.2012 வரை நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். இருந்தாலும் கடைசியில் கெட்ட பெயர் தான் மிஞ்சும். கவலை வேண்டாம் 17.5.2012 முதல் குருபகவான் உத்யோக ஸ்தானத்தை விட்டு விலகுவதால் உங்களை பாடாய்படுத்திய உயரதிகாரி இடம் மாறுவார். நல்ல மேலதிகாரி பணியில் வந்து சேர்வார். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். ஜூன், செப்டம்பர், நவம்பர் 
மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. கணினி துறையினருக்கு பணிச்சுமை குறையும். புது சலுகைகளும் கிடைக்கும்.


அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகள் வந்தாலும் யோசித்து ஏற்பது நல்லது. வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். தலைமையிடம் பேசும் போது பணிவு அவசியம்.கலைஞர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு உண்டு. விவசாயிகளே! நவீனரக உரங்களை பயன்படுத்தி மகசூலை இரட்டிப்பாக்குவீர்கள். கூட்டுறவு வங்கியில் 
கடனுதவி கிடைக்கும்.இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் பணப் பற்றாக்குறையையும் மன உளைச்சலையும் தந்தாலும் 17.5.2012 முதல் எதிலும் வெற்றியையும், யோகத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
திருவக்கரை வக்ரகாளியம்மனை பஞ்சமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Mithunam


எந்தச் சூழ்நிலையிலும் கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாத நீங்கள், மற்றவர்களை வழி நடத்திச் செல்லும் அளவிற்கு மதியூகமும் தலைமைப் பண்பும் கொண்டவர்கள். கடுமையாக தாக்கிப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாமல் காய்களை நகர்த்தும் நீங்கள், ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் சுமக்கும் சுமைதாங்கிகள்.உங்கள் ராசிநாதனான புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர், நண்பர் வருகையால் வீட்டில் ஆனந்தம் பொங்கும்.

 புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. மகளுக்கு பல இடங்களிலும் வரன் தேடி அலைந்தீர்களே, இப்பொழுது நல்ல வரன் கிட்டும். சொந்தபந்தங்கள் மெச்சும்படி கோலாகலமாக திருமணத்தை முடிப்பீர்கள். மகனிடமிருந்த கூடாப் பழக்கங்கள் விலகும். அவர்கள் விரும்பியபடி அயல்நாட்டில் தரமான பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பெற உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வரும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். 


தாயாருக்கு இருந்த முதுகு வலி, மூட்டு வலி சரியாகும். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். அடிக்கடி தொல்லை கொடுத்த வாகனத்தை 
மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள்.  16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக காணப்படுவதால் திடீர் யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். உங்களையும் அறியாமல் உங்களிடமிருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். 

தன்னம்பிக்கையும் நேர்மறை எண்ணமும் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பெரிய பதவிகள் தேடிவரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். ஆனால், 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். 

நன்கு அறிமுகமாகாதவர்களை, புதிய நண்பர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்கள் சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 
வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை செவ்வாய் 3ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள். 

கைமாற்றாக வாங்கியதை தந்து முடிப்பீர்கள். மகனின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். சிலநேரங்களில் உங்களையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்ததல்லவா! இனி எதிலும் கவனமாக செயல்படுவீர்கள். சிலருக்கு இரண்டு சக்கர வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு காரில் செல்லும் யோகமும் உண்டு.


வருடம் பிறக்கும்போது 6ம் வீட்டில் ராகுவும் 12ம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருப்பதால் வெளிநாட்டுப் பயணம், வேற்று மதத்தினரால் உதவி எல்லாம் உண்டு. பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை உணருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் ராகுவும் 11ம் வீட்டில் கேதுவும் நுழைவதால் உங்களின் செயல்களில் தெளிவு பிறக்கும். எதையும் முதல் முயற்சியில் முடித்துவிட வேண்டுமென்பதில் கவனமாக இருப்பீர்கள்.

 பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் வந்துபோகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். இளைய சகோதரர் உங்களுக்கு பக்க
பலமாக இருப்பார். அரசாங்க வேலைகளில் வெற்றியுண்டு. சனிபகவான் ராசிக்கு 5ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். அவர்களின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து நிறைவேற்றப் பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை பிரிய வேண்டியது வரும். 


தாய்மாமன் வகையில் செலவுகளும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களும் வந்து போகும். குலதெய்வக் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் வரும். கடுமையான வார்த்தைகளை தவிர்க்கப் பாருங்கள். சிலரின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்து கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம், யோகா செய்வது நல்லது. 


கன்னிப் பெண்களே! சிலருக்கு கல்யாணம் ஏற்பாடாகியும் நின்று போனதே! இனி அந்த நிலை மாறும். வருடத்தின் முற்பகுதியிலேயே உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வாழ்க்கைத்துணை அமைவார். அழகு, அறிவு கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும்.மாணவர்களே! இரவில் சீக்கிரம் படுத்து, அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள். வியாபாரிகளே! இந்த வருடத்தில் அமோக லாபம் இருக்கும். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை இழுப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். 

ஏப்ரல் மாதத்திற்குள் வரவேண்டிய பாக்கிகளெல்லாம் வந்துசேரும். புது கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. உணவுவிடுதி, ரியல் எஸ்டேட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். 


உத்யோகஸ்தர்களே! வீண் அவமானங்கள், வேலைச்சுமை, விருப்பமில்லாத இடமாற்றங்களையெல்லாம் சந்தித்தீர்களே! ஆனால், இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே உங்கள் கை மேலோங்கும். ஏப்ரல், மே மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். சிலருக்கு புதுவேலை 
அமையும். மேலதிகாரியுடன் இருந்த கருத்துமோதல்கள் நீங்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். 
கணினி துறையிலிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். 

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுங்கள். புதிய பொறுப்புகள் தேடிவரும். கலைத்துறையினரே! வர வேண்டிய சம்பளபாக்கி கைக்கு வரும். புகழடைவீர்கள்.    விவசாயிகளே! பூச்சித் தொல்லை, வண்டுக்கடியிலிருந்து பயிரைக் காப்பீர்கள். உங்கள் கடன் தள்ளுபடியாகும். 
இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் அதிரடி வளர்ச்சியை தருவதுடன், பிற்பகுதியில் கொஞ்சம் அலைச்சலையும் பக்குவத்தையும் தருவதாக அமையும். 
பரிகாரம்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் அருளும் சுகாசன பெருமாளை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Rishabam


காற்று முதல் குடிக்கும் தண்ணீர் வரை அனைத்தையும் ரசித்து ருசிப்பவர்களே! பாலைவனத்திலும் பதியம் போட்டு பசுமையை பார்க்கும் கற்பனைவாதிகளே! ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை பார்க்கும் நீங்கள், களங்கமற்ற பேச்சால் சுற்றியிருப்பவர்களை கலகலப்பாக்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 9ம் வீட்டில் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். 

விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைபட்ட கல்யாணம் முடியும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடனுக்காக காத்திருந்து, வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்று போனதே! இனி பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். இந்த ஆண்டு முழுக்க பிள்ளைகளுக்கு அருமையான காலக் கட்டமாக  இருக்கும். கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். 

உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். புதன் 8ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் சிநேகம் கிடைக்கும். பிரபலமாவீர்கள். தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் நிற்பதால் அநாவசிய செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். 

பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். 17.5.2012 முதல் குருபகவான் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மகுருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தேனொழுகப் பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பி விட வேண்டாம். அடிக்கடி கோபப்பட்டு டென்ஷனாவீர்கள். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அளவை மாதந்தோறும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். லாகிரி வஸ்துக்களை பயன்படுத்துபவர்கள் இனி அவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

 
கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். உணர்ச்சிவசப்படாமல், நிதானமாக எந்த முடிவையும் எடுப்பது நல்லது. குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, தலைச் சுற்றல் வரக்கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 4ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றியுண்டு. 


தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். நெருக்கமானவர்களுடன் மோதல், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்திருந்த வகையில் உதவியுண்டு. மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார். தங்கையின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். 
அயல்நாட்டிலிருக்கும் நண்பர்கள் உதவுவார்கள். 


வருடத்தின் தொடக்கத்திலிருந்தே ராசிக்குள் கேதுவும் 7ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்த வண்ணம் இருக்கும். சேமிப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக் கூடும். எனவே பண விஷயத்தில் கறாராக இருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்ப சிதைவு வரக்கூடும். ஆனால் 1.12.2012 முதல் கேது 12ம் வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால் ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என சுபச் செலவுகள் அதிகரிக்கும். 

வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் முழுமையடையும். உங்களை கண்டும் காணாமல் போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பிரச்னைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வீடு வந்து சேரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். தேங்கிக் கிடந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில்  பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும்  டென்ஷனும் இருக்கும். அவர்களின் போக்கையும் நண்பர்கள்  வட்டத்தையும் கண்காணியுங்கள்.

  
கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கண்ணுக்கு அழகான நல்ல கணவர் வந்தமைவார். ஆடை அணிகலன்கள் சேரும். தடைபட்ட கல்வியை தொடர்வார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்துபோகும். 
மாணவர்களே! வகுப்பறையில் இனி அரட்டையடிக்கமாட்டீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு. வகுப்பறையில் பாராட்டுகள் கிடைக்கும்.  


வியாபாரிகளே! நீண்டநாட்களாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதிய முதலீடுகளை செய்வதுடன் கடையை விரிவுபடுத்தி போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். ஷேர், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள்.


உத்யோகஸ்தர்களே! உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். கவலைகள் மறைந்து உற்சாகம் பிறக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்கமாட்டீர்கள். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டு. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கணினி துறையினருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் வாய்ப்பு வரும்.  

அரசியல்வாதிகளே! உங்களின் செயல் பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை.  
கலைத்துறையினரே! தடைபட்ட ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். கௌரவிக்கப்படுவீர்கள்.  மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.விவசாயிகளே! கடன் தருவதாக சொல்லி வங்கிகளில் அலைக்கழித்தார்களே, இனி அந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நெல்,கரும்பு சாகுபடியால் நல்ல லாபமடைவீர்கள். இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை  வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.
பரிகாரம்:
திருவாரூர் தியாகராஜரையும் கமலாம்பிகையையும் பிரதோஷ நாளில் சென்று தரிசியுங்கள். விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Mesham


உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம், சாதி, மதம் பார்க்காமல் உண்மையான பாசமுடன் பழகுவீர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருந்து சாதிக்கும் நீங்கள், இலக்கியம், இசை, ஆன்மிகம் என அனைத்திலும் ஆர்வம் கொண்ட கலா ரசிகர்கள்.
உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கனிவான பேச்சு வேலைக்கு ஆகாது என்று கறாராக பேசவேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். 

ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும் கையைப் பிடிப்பதுமாக இருந்தவர்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். உங்களுக்கு பன்னிரெண்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடே சுப நிகழ்ச்சிகளால் களைகட்டும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி வீடு தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு. 

விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது செய்ய முடியும். 16.5.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக நீடிப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும் போதெல்லாம் அதை தட்டி வைக்கப் பாருங்கள். உங்களைப்பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவெடுத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். 

ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் கோபம் குறைந்து கனிவு பிறக்கும். இனி கடுமையாக பேசாமல் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நீங்களும் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, மயக்கம் எல்லாம் நீங்கும். பார்வைக் கோளாறு சரியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உங்களின் பாசத்திற்கு கட்டுப்படுவார்கள். உங்கள் சொல்படி நடப்பார்கள். பிரிந்திருந்த கணவன் -மனைவி ஒன்று சேருவீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.


உங்கள் ராசிநாதனான செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 5ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுவது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. மாடிப்படிகளில் ஏறும் போது கவனமாக இருங்கள். வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். சகோதரியின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். 

அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய சிக்கல்கள் யாவும் தீரும். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புது முயற்சிகள் பலிதமாகும். நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். வருடம் பிறக்கும்போது 2ம் வீட்டில் கேதுவும் 8ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஒருவருக்
கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. 

உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்புச் சண்டையை ஏற்படுத்தக் கூடும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்குள் கேதுவும் 7ல் ராகுவும் நுழைவதால் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.சனிபகவான் ராசிக்கு 7ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், காரண்டர் கையெழுத்திட வேண்டாம். உப்பு சப்பில்லாத விஷயத்திற்குக்கூட மனைவியுடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. 

மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் அதிக இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவதையோ, சாலையை கடப்பதையோ தவிர்க்கவும். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்தி விடுங்கள். சட்டத்திற்குப் புறம்பாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். 

சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! வருடத்தின் முற்பகுதியில் காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நொறுக்குத் தீனிகளை குறையுங்கள். ஜூன் மாதத்திலிருந்து தலைவலி, மாதவிடாய்க் கோளாறு சரியாகும். கல்யாணம் கூடிவரும். 

சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.மாணவர்களே! மறதி, மந்தம் நீங்கும். விளையாட்டை குறைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். வியாபாரிகளே, மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பெரிய முதலீடுகளை கடன் வாங்கி பண்ணாதீர்கள். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. பழைய சரக்குகளை லாபகரமாக விற்றுத் தீர்க்கப்பாருங்கள். 

பாக்கிகளை அலைந்து திரிந்துதான் வசூலிக்க வேண்டிவரும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜூன் மாதத்திலிருந்து வியாபாரம் சூடு பிடிக்கும். ஹோட்டல், ஷேர், மர வகைகளால் லாபமுண்டு. பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். கூட்டுத் தொழில் வேண்டாம். உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவரும். அதிகாரிகளிடம் அதிக உரிமையுடன் பேச வேண்டாம். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். 

நீங்களே செய்வது நல்லது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். வருட பிற்பகுதியில் சம்பள உயர்வு, பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு நிறுவனங்களில் சிலருக்கு புது வேலை அமையும். சக ஊழியர்களுடன் இருந்த மனப்போர் நீங்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வருட மத்தியப் பகுதியில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு எதிராக எந்த விமர்சனமும் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். 

 
கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். தடைபட்ட வாய்ப்புகள் வேற்றுமொழியில் அமைந்து புகழடைவீர்கள். 
விவசாயிகளே! நவீனரக உரங்களால் மகசூல் பெருகும். நிலத்தகராறு தீரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
இந்தப் புத்தாண்டு மே மாதம் வரை உங்களை சோர்வடைய வைத்தாலும், ஜூன் மாதத்திலிருந்து சவால்களில் வெற்றி பெற வைப்பதுடன் வருமானத்தையும் வாரி வழங்கும். 
பரிகாரம்:
திருத்தணி முருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.