Tuesday, 1 October 2013

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) -Khumbam

கும்பம்: புது தொழில் துவங்குங்க! கோடிகளை அள்ளுங்க!!

 வெற்றி தோல்வியை சமமாகக் கருதும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5க்கு பெயர்ச்சியாகிறார். இதனால், குருபலம் உண்டாகப் போகிறது. இவர் 1,9,11 ஆகிய ராசிகளைப் பார்வையால் பலப்படுத்துகிறார். 9ல் இருக்கும் சனியின் பார்வை 3,6,11 ஆகிய ராசிகளில் பதிகிறது. பெரு பதினொன்றைத் தேழ் பேர், ஒன்பதாம் இரண்டில் தேவ குருவரில் செல்வம் சிரூர், குதிரை வெண்குடை தீவர்த்திதருமமும் தானமுண்டு, தாய் தந்தை துணையும் உண்டாம்அருமையும் பெருமையுண்டாம், அரசர் சேவையும் உண்டாமேஎன்கிறது ஒரு ஜோதிட வெண்பா.ஆம், குரு ஐந்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆயுள்பாவம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் குருவின் சஞ்சாரத்தால் பல துன்பங்களில் சிக்கித் தவித்தீர்கள். தற்போது குருவின் பார்வை ராசியில் பதிவதால் உடல் பொலிவு பெறும். ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரநிலை உயர்ந்து பணப்பற்றாக்குறை நீங்கும். புதியவகையில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. புதிய தொழில்களில் ஈடுபட்டால் பணம் கோடியாய் கொட்டும். குடும்பத்தேவை நிறைவேறும். பழைய கடன்பாக்கியைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது, கவனமாக இருப்பது நல்லது.காரணமே இல்லாமல் அவ்வப்போது மனதில் பயம் உருவாகும். சகோதரர் வகையிலும் எச்சரிக்கை தேவைப்படும். அளவுக்குமீறிய உதவிகளைச் செய்து அவதிக்கு ஆளாகலாம் கவனம். சிலநேரத்தில் தேவையற்ற வாக்குவாதம், வம்புகளைச் சந்திக்க இடமுண்டு. தாயின் உடல்நலத்தில் அக்கறை தேவை. வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலருக்கு வீடு, இடமாற்றம் ஏற்படும். வாகன வகையில் ஓரளவு ஆதாயபலன் பெறுவீர்கள். மராமத்துச் செலவைக் குறைக்க முடியாது. புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள் குருவருளால் மழலை பெற்று மகிழும் சந்தர்ப்பம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் வகையில் மருத்துவச் செலவு இனி செய்ய இடமில்லை. அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் உண்டாகும். மொத்தத்தில் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கடந்த இரு ஆண்டுகளாக இருந்து வந்த திருமணத் தடை அகலும். உறவினர் ஆதரவால் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கருத்துவேறுபாடு நீங்கி கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். சத்ரு ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு நீங்களே எதிரியாக இருப்பீர்கள். எந்த விஷயத்தையும் காரணமின்றி தள்ளிப் போடுவதாலும், முடிவு எடுக்க முடியாமல் திணறுவதாலும் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். தந்தையின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். அதே சமயத்தில் பூர்வீகச் சொத்து பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு உண்டாகும். கல்வி ஸ்தானம் மந்தகதியில் இருப்பதால் உயர்கல்வி கற்பதில் தடையுண்டாகும். மொத்தத்தில் குருவின் சஞ்சாரத்தால் சனியின் தாக்கம் பெருமளவு குறைந்து விடும். பிரச்னைகள் அவ்வப்போது தலைதூக்கினாலும், அதற்கான தீர்வும் உடனடியாகத் தென்படும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தாராள பணவசதி, தொழில்நுட்ப உதவி எளிதாக கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலதிபர்களுக்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். தொழிலில் அபிவிருத்தி பணிகளை திறம்பட மேற்கொள்ள புதிய திட்டம் உருவாக்குவீர்கள். எதிர்பார்த்த பணவசதி தாராள அளவில் கிடைத்து பணிகளை மேற்கொள்வீர்கள். உற்பத்தி, விற்பனை செழித்து உபரி பணவரவைத் தரும். நிர்வாக பணியில் புத்திரர்களுக்கு தகுந்த பயிற்சி தந்து பொறுப்புடன் செயல்பட உதவுவீர்கள். புதிய கிளை துவங்கவும் அனுகூலம் உண்டு.
வியாபாரிகள்: சந்தையில் போட்டி குறைந்து வியாபாரத்தில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் பேராதரவு கிடைத்து விற்பனை இலக்கில் வியத்தகு சாதனை புரிவீர்கள். லாபம் அதிகமாக இருக்கும். சில வகைகளில் கிடைக்கும் உபரி பணத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். கூடுதல் கிளை துவங்குகிற முயற்சி நிறைவேறும். சக தொழில் சார்ந்தவர்கள் ஒத்துழைப்பு தருவர். குடும்பத்தின் முக்கிய தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். அரசு, நிதி நிறுவனங்களில் பெற முயற்சிக்கிற உதவி கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒருமித்த மனதுடன் செயல்பட்டு பணிகளை வேகமாக முடிப்பர். பணிச்சுமை எவ்வளவு அதிகரித்தாலும் இன்முகத்துடன் முடித்து விட்டு, அடுத்த வேலையைத் தரத்தயாரா என கேட்குமளவு மனநிலையும், உடல்நிலையும் ஒத்துழைக்கும். ஓவர்டைம், சம்பள உயர்வு, விரும்பிய பதவி உயர்வு, விண்ணப்பித்த கடனுதவி தாமாக வந்து சேரும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடந்து கொள்வர். தாராள பணவசதி பெற்று அத்தியாவசிய செலவுகளை மனமகிழ்வுடன் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். ஆடை, ஆபரணம் விரும்பியபடி வாங்குவீர்கள். பணிபுரியும் பெண்கள் பணித்திறமையை வளர்த்து பணிகளை வேகமாக முடிப்பர். தாமதமான சலுகைகள், பதவி உயர்வு எளிதாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி வருமானம் கிடைத்து மூலதன தேவைகளுக்கு பயன்படும்.பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
மாணவர்கள்: முறையான பயிற்சியை பின்பற்றி பாடத்திட்டங்களை மனதில் எளிதில் பதித்துக்கொள்வீர்கள். நல்ல மார்க் பெற இடம் உண்டு. படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெற ஒருவருக்கொருவர் உதவி கரமாக செயல்படுவர். தாய், தந்தையின் அன்பு, பாசம் மனதை நெகிழ வைக்கும். விளையாட்டு, தனித்திறன் வளர்ப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். பாராட்டு, பரிசு கிடைக்கும். படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பணிவாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: உற்சாகத்துடன் சேவை புரிந்து ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேற அதிகாரிகளின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். எதிரிகளால் வருகிற இடையூறுகளை எப்படியாவது சரிக்கட்டி விடுவீர்கள். புத்திரர்கள் உங்களின் அரசியல் பணிக்கு அதிகளவில் உதவிகரமாக செயல்படுவர். சொத்து வாங்க அனுகூலம் உண்டு.
விவசாயிகள்: விவசாயப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் தாமதமின்றி கிடைக்கும். பணவசதியும் சீராக இருக்கும். அதிக மகசூல் கிடைத்து நல்ல வருமானம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் கணிசமான லாபமும் கிடைக்கும். புதிய நிலம் வாங்க அனுகூலம் உண்டு.
பரிகாரம்: சிவபெருமானை வணங்கினால் உங்கள் நிலையில் மேலும் முன்னேற்றமாகி புகழும் கிடைக்கும்.
பரிகாரப் பாடல்:
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளிந்தாய் போற்றி
ஓவாத சந்தத்து ஒலியே போற்றி
 ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Makaram

மகரம்: வருமானம் கூடினாலும் மனசுக்கு பிரச்னைதான்!

உழைப்பில் உறுதி மிக்க மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் 6ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவரின் பார்வை ராசிக்கு 2,10,12 ஆகிய இடங்களில் பதிகிறது. 10ல் சஞ்சரிக்கும் சனியின் பார்வை, 4,7,12 ஆகிய இடங்களில் விழுகிறது.கேளப்பா குருபதியும் ஆறில் ஏற கெடுதி மிகச்செய்வன் மாபலியாம் மன்னன்சீரப்பா சிறைக்கூடம் சென்றாரய்யாசிவசிவா தேவர்களின் கொடுமையினாலேஈரப்பா ராஜபயம் கலகம் துன்பம் இல்லதனில் களவும் போம் கிலேசம் மெத்தவீரப்பா வெகுபயமாய் சர்ப்பதோஷம் வேந்தன் நின்ற பதியறிந்து வினையை மூட்டே!என்கிறது ஒரு வெண்பா.இதன்படி, ஆறாம் இடத்து குரு மூலம் சிரமங்களைச் சந்திக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஓராண்டுகாலமாக குருவின் சுபஸ்தானத்தால் நன்மையைப் பெற்ற நீங்கள், இப்போது சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். இருந்தாலும் மனதளவில் பிரச்னைக்கு உள்ளாவீர்கள். மனதில் தைரியம் குறைய அனுமதிக்காதீர்கள். சகோதர, சகோதரிகள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட இடமுண்டு. அவர்களிடம் ஒதுங்கி நடந்து கொள்வது நல்லது. தாயின் உடல்நிலை பாதிக்கலாம். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளவும் வாய்ப்புண்டு. வீடு,வாகனத்தில் புதிய மாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்வது பிரச்னையைக் குறைக்க உதவும். குழந்தைகள் கல்வி,வேலைவாய்ப்பில் பின்தங்க வாய்ப்புண்டு. தக்க அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். அவர்களின் உடல்நிலையிலும் அக்கறை தேவைப்படும். உடல்ரீதியான பிரச்னைக்கு உள்ளாவீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையை உடனுக்குடன் சரிசெய்வது அவசியம். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் விடாமுயற்சி தேவைப்படும். உறவினர்களின் ஆதரவும் சுமாராகவே இருக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குடும்ப அமைதியைக் குலைக்கும் சூழ்நிலை உள்ளது. அக்கம்பக்கத்தினரோடு அளவாக பழக்கம் வைத்துக் கொள்வது நன்மைஅளிக்கும். எதிரி ஸ்தானம் பலம் பெறுவதால் நண்பர்கள் கூட பகைவர்களாக மாற இடமுண்டு. அதனால், எதிலும் நிதானமாக இருப்பது அவசியம். பூர்வீகச் சொத்தில் பிரச்னை உருவாகும். பாகப்பிரிவினை போன்ற முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. என்ன தான் கஷ்டசூழ்நிலை இருந்தாலும், பணப்புழக்கம் ஓரளவு கைகொடுக்கும். இதனால், மனதை சலனப்படுத்திக் கொள்ளாமல், இறை வணக்கத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்தி ஆறுதல் பெறலாம். ஆறாமிட குரு காலத்தில், கடன் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். வாங்கினால் அதை அடைக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.இந்த சமயத்தில், ஏதாவது புண்ணியத்தலத்துக்கு சென்று வருவது நல்லது. குடும்பத்துடன் சென்று வந்தால் இன்னும் சிறப்பு. பணவிஷயத்தில் வாழ்க்கைத்துணை நீங்கலாக பிறரை நம்ப வேண்டாம்
தொழிலதிபர்கள்: கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். சுமாரான உற்பத்தியும், அதற்கேற்ற மிதமான பணவரவும் இருக்கும். சிலர் தொழிலுக்காக கடன் வாங்கவும் செய்வர். நிர்வாக நடைமுறைகளில் கூடுதல் கவனம் கொள்வதால் உற்பத்தி, தரத்தின் அளவை சராசரிக்கு கொண்டுவர இயலும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு காரணமாக, இக்கட்டான சமயங்களில் தப்பி விடலாம். ஆனால், அவர்களுக்கு சலுகை தரும் போது செலவு கூடும். 
வியாபாரிகள்: சந்தையில் உருவாகிற போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். விற்பனையில் சுமாரான இலக்கை அடைவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதால் நிறுவனத்திற்கு நற்பெயருடன் பணப்புழக்கத்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். சரக்கு கிட்டங்கியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொண்டு புதியவர்களின் அறிமுகம் பெறுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை, சலுகைப்பயன் பெறுவதில் தாமதம் தவிர்க்கலாம். பணிச்சுமைக்கு ஆளாவதோடு, எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். அதே நேரம், மிதுன குருவின் ஸ்தான பலத்தை விட, அதன் பார்வை பலம் உங்களுக்கு பணியிலுள்ள சிரமங்களைக் குறைத்து விடும். உழைப்புக்கேற்ற வகையில் சீரான ஓய்வு மேற்கொள்வதால் உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வர். உடல்நலத்தை சரிவர பேணுவதால் மருத்துவ செலவு அதிகரிக்காமல் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள் பணியிட சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் சீரான உழைப்பினால் உற்பத்தி, விற்பனை அளவை பாதுகாத்துக் கொள்வர். சுமாரான லாபம் கிடைக்கும்.
மாணவர்கள்: உயர்கல்வி முயற்சிகளில் பிற்போக்கான நிலை தென்படும். உடல் நலக்குறைவும், மனச்சோர்வும் கல்விவளர்ச்சிக்கு தடையாக அமையலாம். வெளியிடங்களில் சுற்றுவதை குறைத்து படிப்பில் தகுந்த கவனம் கொள்வதால் மட்டுமே தரதேர்ச்சி விகிதம் சீரான அளவில் கிடைக்கும். படிப்புக்கான பணவசதியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சக மாணவர்களுடன் படிப்பு தொடர்பான நல்ல கருத்துக்களை பகிர்ந்துகொள்வீர்கள்.  படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்களுக்கு ஓரளவு சம்பளத்தில் வேலை அமையும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெற அதிக அக்கறையுடன் பணி புரிவது அவசியம்.அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதிரிகள் தருகிற தொந்தரவிலிருந்து சில படிப்பினைகளை கற்றுக் கொள்வீர்கள். சமரச பேச்சுவார்த்தைகளில் இருதரப்பு நியாயம் உணர்ந்து பேச வேண்டும். இல்லாவிட்டால், சிரமம் தான் வரும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி  கிடைக்கும்.
விவசாயிகள்: அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் தேவையான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் முக்கியஸ்தரின் உதவியால் சமரச தீர்வு எளிதில் பெறலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை அளவான செலவில் நடத்துவீர்கள்.
பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் சகல நன்மையும் பெறுவீர்கள்.
பரிகாரப் பாடல்:
ராஜராஜேஸ்வரி நமஸ்காரம்
லலிதாம்பிகையே நமஸ்காரம்
துர்க்கா லட்சுமியே நமஸ்காரம்
புவனேஸ்வரியே நமஸ்காரம்
அன்னபூர்ணேஸ்வரியே நமஸ்காரம்
காமேஸ்வரியே நமஸ்காரம்
பக்தியுடனே உனை நாடி வந்தோம்
பண்புடனே உன்னை பார்க்க வந்தோம்

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Dhanusu

தனுசு: ஐயையையோ ஆனந்தமே! கோடி நன்மை ஆரம்பமே!

குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரித்த குரு, மே28 முதல் 7ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவருடைய பார்வை பலத்தால் 1,3,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 11ல் அமர்ந்து 1,5,8 ஆகிய ராசிகளை பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இது இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். குரு பதினொன்றுஏழ் ஒன்பான் கூறும்ஐந்து இரண்டில் நிற்க திருமகள் கிருபை உண்டாம் தீர்த்த யாத்திரை உண்டாம் தரும தானங்கள் உண்டாம் தந்தை தாய் உதவி உண்டாம்அருமையும் பெருமையும் உண்டாம்அரசர் சேவையும் உண்டாமே!என்று ஏழாம் இட குரு தரும் நற்பலன்களைப் பட்டியலிடுகிறது இந்த ஜோதிட வெண்பா. இதன்படி, வாழ்வில் எல்லாவழிகளிலும் நன்மை பெறுவீர்கள். ஆயுள் அதிகரிக்கும். தொல்லை கொடுத்த நோய்நொடி நீங்கும். கடந்த காலத்தில் உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் கூட வலியவந்து உங்களின் நட்பைத் தேடுவர். வருமானம் தாராளமாக இருக்கும். ஆனால், ஆடம்பர சிந்தனையால் செலவும் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும். அளவுக்கு மீறி வாக்களித்துவிட்டு சிரமத்திற்கு ஆளாகலாம், கவனம். தைரிய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால், மனோதிடம் அதிகரிக்கும். இருந்தாலும் தைரியத்தோடு புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக் கொள்வது நல்லது. கருத்துவேறுபாடு நீங்கி சகோதரர்களிடம் இணக்கம் கூடும். சகோதர வழியில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடத்திட யோகமுண்டு. தாயின் ஆரோக்கியம் சீர்பெறும். அவரது தேவைஅறிந்து உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய மனை, வீடு வாங்கவோ அல்லது கட்டவோ வழி பிறக்கும். வாகன வகையிலும் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகள் கல்வியில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. அவர்களுக்கு தேவையான அறிவுரைகளைக் கூறி நெறிப்படுத்துவது அவசியம். அலைச்சலைத் தவிர்க்க முடியாது. தொல்லை அளித்து வந்த கடன் பிரச்னையிலிருந்து பெருமளவு விடுபடுவீர்கள். ஏழாம் வீட்டில் குரு இருப்பதால், திருமணத்திற்கு காத்திருப்போருக்கு இது சுபமான காலகட்டம். உறவினர்களின் ஒத்துழைப்போடு சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துபேதம் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் பயந்தோடுவர். மறைமுக எதிரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். உங்களின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவர். தந்தையின் உடல்நிலையில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டாலும், பாதிப்பு ஏதும் நேராது. தந்தையுடன் உறவு சீராக இருக்கும். தடைபட்ட உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு உருவாகும். சிலர் கல்வி பெறும் நோக்கில் வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு தாராள பணவசதி அமைவதுடன், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: தொழிலில் எல்லா நிலைகளிலும் நன்மைகளை வாரி வழங்க மிதுனகுரு காத்திருக்கிறார் என்றால் மிகையில்லை. அமோக வளர்ச்சி காணலாம். கல்வியை முடித்துவிட்டு, புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் குருபலத்தால் நற்பலன் காண்பர். உற்பத்தி, தர உயர்வில் சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமான அளவில் கிடைக்கும். உற்பத்தி செழித்து பெரும் லாபம் அடைவீர்கள். புகழ், செல்வாக்கு வளரும். தொழிலதிபர் சங்கப்பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்று கவுரவமான பதவியில் அமருவீர்கள். நவீன இயந்திரங்கள் வாங்குவீர்கள். தொழிற்சாலை அபிவிருத்தி பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரிகள்: அனுபவசாலிகளின் ஆலோசனை வரப்பிரசாதமாக கிடைத்து வியாபார நடைமுறையில் சில மாற்றங்களை செயல்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவினால் விற்பனை, பணவரவில் முன்னேற்றம் அடைவீர்கள். சந்தையில் நன்மதிப்பு, புகழ் பெறுவீர்கள். பாக்கிப் பணத்தை எந்த வித சிரமமும் இன்றி எளிதில் வசூல் செய்வீர்கள். புதிய கிளை துவங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். வங்கி நிதியுதவி எதிர்பார்த்த அளவில் கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் பணித்திறனை வளர்த்து ஆர்வமுடன் செயல்படுவர். குறிப்பிடத்தக்க அளவு சம்பளம் உயரும். பணிச்சுமை குறையும். ஓவர்டைம் போன்ற வகைகளால்வருமானம் கூடும். குறித்த காலத்தில் வேலைகளை முடிப்பதால், அதற்குரிய சலுகைகளையும் பெறுவீர்கள். நிர்வாகத்தின் பார்வையில் உங்கள் மீதான மதிப்பு உயர்ந்து பொறுப்பான பதவி கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். அதிக வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள்.
பெண்கள்: குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். எதிர்கால வாழ்வு நடைமுறை பற்றிய நம்பிக்கை வளரும். சேமிப்பு உயரும். நீண்ட காலமாக வாங்க விரும்பிய நகை அல்லது ஆடம்பரப் பொருட்களை இந்த கால கட்டத்தில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக இப்போது இடும் திட்டம் வெற்றி பெறும். பணிபுரியும் பெண்கள் பணித்திறமையை வளர்த்துக் கொள்வர். வேலைப்பளு குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் அதிக ஆர்டர் பெறுவர். உற்பத்தி, விற்பனையில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். லாபம் அபரிமிதமாக இருக்கும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் கைகூடும்.
மாணவர்கள்: அறிவுத்திறன், ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். சக மாணவர்கள் சுமூக உறவு கொள்வர். ஆசிரியர்களும், பெற்றோரும் படிப்புக்கு தேவையான உதவி வழங்குவர். பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அதிக மார்க் பெறுவீர்கள். உங்கள் தனித்திறமை பாராட்டப்பட்டு, வெகுமதி கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு கவுரவமான சம்பளத்தில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: சமயோசிதமாக செயல்பட்டு ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். நன்மதிப்பும் புகழும் அதிகரிக்கும். எதிர்ப்பாளர்களால் இருந்த தொல்லை விலகும். கவுரவமான பதவி, பொறுப்பு கிடைக்கும். புத்திரர்களின் நுட்பமான ஆலோசனை உங்களை முன்னேற்ற பாதையில் நடைபோட வைக்கும். சமரச பேச்சுக்களில் நல்ல தீர்வு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும்.
விவசாயிகள்: தாராள பணவசதி கிடைத்து விவசாயப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். மகசூல் அதிகரித்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் திருப்திகரமான லாபம் வந்துசேரும். புதிய நிலம் வாங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை தாராள பணச்செலவில் நடத்துவீர்கள்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் வசதிகள் மேலும் மேலும் உயரும்.
பரிகாரப் பாடல்:
மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலி வாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
புஷ்கலா நாதனே வருக வருக
பூரணை துணைவா வருக வருகவே!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Viruchagam

விருச்சிகம்: படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான்!

நாணயத்துடன் வாழ விரும்பும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு7ல் சஞ்சரிக்கும் குரு, மே28 முதல் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதை அஷ்டம குரு என்பர். அவரின் சுபபார்வை 2,4,12 ஆகிய ராசிகளில் பதிகிறது. விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிக்கும் சனி 2,6,9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  சொல்லவே பொன்னவனும் ஜென்மம் மூன்று சுகமான நாலாறு எட்டு பத்து வல்லவே பன்னிரண்டில் இருந்து வாழ அலைச்சலோடு சத்துரு நிஷ்டூர வாதம்புல்லவே சகோதரர் தாய் மனையாள் புத்திரரின்நலம் கெடும் பொருளும் போகும் அல்லவே மன்னவரால் பதியும் சேதம் அரிவையர் தங்களால் வியாதியாமே!என்கிறது ஒரு வெண்பா.எட்டில் குரு வந்தால், அவரால் நடக்க வேண்டிய நன்மைகள் தடைபடும் என்று எச்சரிப்பதே இந்த ஜோதிட வெண்பாவின் நோக்கம். ஏழரைச்சனி வேறு நடப்பதால் நிலைமை கொஞ்சம் சிக்கலோ என்று எண்ண வேண்டியுள்ளது. இருப்பினும், குருவின் 12ம் இட பார்வை ஏழரையின் தாக்கத்தை குறைக்கும்.மற்ற கிரகங்களால் கடுமையை எதிர்கொண்டாலும் கேதுவின் அனுகூலத்தால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். அதனால்,அடிக்கடி கோயிலுக்குச் செல்வதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். படைத்தவன் தானே நம்மைப் பாதுகாக்க முடியும்! குருபலத்தால் ஆயுள்பலம் அதிகரிக்கும், இருப்பினும், ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது அவசியம். எட்டாம் இட குரு வாழ்வில் தடுமாற்றத்தை உருவாக்கும். பணப் பற்றாக்குறை உண்டாகும். கடன்விஷயத்திலும் உஷாராக இருப்பது அவசியம். சிக்கனத்தை கடைபிடித்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். குடும்பத்தில்சலசலப்புக்கு பஞ்சமிருக்காது. பேச்சில் மிகவும் கவனம் தேவை. நிதானம் இழந்து பேசுவதால் பிரச்னைக்கு உள்ளாகலாம், கவனம். சகோதரர்கள் உங்களிடம் உரிமை என்ற பெயரில் மோதுவார்கள். அவர்களிடம் அளவாக உறவு கொள்வது நல்லது. இயன்ற உதவிகளை அவர்களுக்கு மறுக்காமல் செய்வதன் மூலம் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கலாம். முரட்டு தைரியம் அதிகரிக்கும். இது சில சிக்கல்களில்மாட்டி விடும். கவனம். தாயிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி இணக்கம் அதிகரிக்கும். அவர்களின் தேவையை நிறைவேற்றி அன்புக்குரியவராகத் திகழ்வீர்கள். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியைப் பயன்படுத்திக் கொள்வது போதுமானது. வீட்டில் பராமரிப்பு செலவு செய்ய நேரிடும்.குழந்தைகளின் கல்வி, ஆரோக்கிய விஷயங்களில் அதிருப்திக்கு ஆளாவீர்கள். விழிப்புடன் இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவது நல்லது. அதிக அலைச்சல் இருக்கும். உங்கள் உடல்நிலை சீராக இருக்காது. உஷ்ண வியாதிகளால் அவதிப்படலாம். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தடைகள் குறுக்கிடும். உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைப்பது சந்தேகம் தான். கணவன், மனைவி கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக்கொடுக்கும் மனோபாவம் குறையும். குடும்ப உறுப்பினர்கள் சிலரே பிரித்தாளும் தந்திரத்தை செய்து கொண்டிருப்பர். உஷார்.நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாற வாய்ப்புண்டு. அந்தரங்கப் பணிகளை, உங்களின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ளும் சூழ்நிலையும் இருக்கிறது. பூர்வீகச் சொத்தின் மூலம் பிரச்னைக்கு உள்ளாவீர்கள்.
தொழிலதிபர்கள்: உற்பத்தி மிக சுமாராகவே இருக்கும். லாபம் எதிர்பார்த்த அளவு இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் குளறுபடி ஏற்படலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். தொழில் கருவிகளை மாற்றியமைத்து உற்பத்தியைப் பெருக்கும் திட்டம் சிரமத்தின் பேரில் நிறைவேறும். தொழிற்சாலை இடவசதியை அதிகரிப்பீர்கள். பண வரவு செலவில் நேரடி கண்காணிப்பு நல்லது.
வியாபாரிகள்: சந்தையில் போட்டி அதிகரிப்பதால் விற்பனை இலக்கை அடைவதில் பின்தங்குகிற நிலை ஏற்படும். பொருட்களின் தரம் உயர்வாகவும், அளவான லாபத்திற்கு விற்பதன் மூலமும், வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். நிர்வாகச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்வதால் பணம் மிச்சமாவதுடன், உடல்நலமும் பாதுகாக்கப்படும். வியாபார அபிவிருத்திக்காக எதிர்பார்க்கிற நிதியுதவி கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அதிக பணிச்சுமையை எதிர்கொள்கிற நிலை உண்டு. சோம்பல் குணம் மேலோங்கும் என்பதால், மனஉறுதியுடன் அன்றைய பணியை அன்றே முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லாதபட்சத்தில் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரும். சிலர் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். சலுகைகள் அதிகம் இராது. எனவே, குடும்பத் தேவைகளுக்காக அலுவலகத்தில் கடன் வாங்க நேரும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு இருக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படலாம்.
பெண்கள்: குடும்பப்பெண்கள் கணவருடன் அனுசரித்து நடக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்படுவர். நல்லோரின் அன்பு, ஆசி கிடைத்து மனதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு இருக்கும் என்பதால், சிக்கன செலவு செய்து சிரமம் அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதால் மட்டுமே பணியில் குளறுபடி, ஒழுங்கு நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் குறைவே. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம் இட்டால் போதும். கடுமையாக உழைத்தால் தான் உற்பத்தி, விற்பனையை காத்துக் கொள்ள முடியும்.
மாணவர்கள்: உடல்நலத்தை நல்லமுறையில் பராமரித்துக்கொள்வதால் மட்டுமே படிப்பில் கவனம் ஏற்படும். படிப்புக்கான பணவசதி குறைந்த அளவில் கிடைக்கும். சிலர், பகுதிநேர வேலை பார்த்து படிப்புக்கான பணச்செலவை ஈடுகட்ட முயற்சிப்பர். சக மாணவர்களிடம் கருத்துபேதம் வராத சுமூக சூழ்நிலை இருக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு குறை ஏற்படாமல் படிப்பில் அதிக கவனம் கொள்வது நல்லது. வண்டியை வேகமாக ஓட்டுவது கூடாது.
அரசியல்வாதிகள்: செயல்கள் நிறைவேறுவதற்குள் பலவித சோதனை, எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். நம்பிக்கையுடன் நடந்துகொள்வதால் மட்டுமே நன்மை கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி ஊக்கம் தரும். ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு எளிதல்ல. எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமென செயல்பட்டால் நேரமும் பணமுமே விரயமாகும். கடன் கொடுத்த பணம் வசூலாகும். வாகன வசதிபெற வழியுண்டு.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் கிடைப்பதில் தாமதமும் பணப்பற்றாக்குறையும் ஏற்படும். அளவான மகசூல், அதற்கேற்ப பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான பிரச்னை இழுத்தடிக்கும்.
பரிகாரம்: முருகப்பெருமானை வணங்குவதால் பிரச்னைகளின் தீவிரம் குறைந்து விடும்.
பரிகாரப் பாடல்:
அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!
துன்பம் அகற்றிடும் சீலா பாலா!
சிவகுமாரா முருகா வருக!
பரமா! புருஷா! வரம் தர வருக!
கலங்காது எனையே காத்திட வருக!
காவாய் முருகா கார்த்திகை குமரா!
வா வா முருகா! வல்லமை தரவே.

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Thulam

துலாம்: ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் என ஊஞ்சல்!


வெற்றியே குறிக்கோள் என துடிப்புடன் செயல்படும் துலாம்ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 8ல் சஞ்சரித்த குருபகவான், மே28முதல் பாக்கியஸ்தானமான 9ம்இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவர் தன்பார்வையால் 1,3,5 ஆகிய ஸ்தானங்கள் வாயிலாக நன்மையை வாரி வழங்குவார். ஜென்மத்தில் இருக்கும் சனியின் பார்வை 3,7,10 ஆகிய இடங்களில் பதிகிறது. பாரப்பா குருவே தான் இரண்டொடு ஐந்தேழ் பரிவாகும் நவத்தோடு பதினொன்றில் தான் சீரப்பா நின்றபலன் செப்பக்கேளு சிவிகையொடு கரிபரி கல்யாணம் கூடும் நேரப்பா பூஷணமும் மறையோர் நேயம் நிலையாகும் அரசருடன் பேட்டி காணும் கூறப்பா சுகமெல்லாம் கொடுக்கும் மெத்த குடும்பமது தான் செழிக்கும் கீர்த்தி ஓங்கும்என்று ஒன்பதாம் இட குரு தரும் நன்மைகளை பட்டியலிடுகிறது இந்த ஜோதிட வெண்பா. இதன்படி, ஏழரைச்சனியின் கெடுபலனை, குருவின் பார்வைபலம் பெருமளவு குறைத்து விடும். அதாவது, இத்தனை நாள் மனதில் வீசிய வெப்பக்காற்று தணிந்து, மனம் இன்ப ஊஞ்சலாடும். ஆயுள்பலம் அதிகரிக்கும். அதேசமயம், ராகுவால் உடலில் இனம்புரியாத பிரச்னைகள் அவ்வப்போது உண்டாவதை தவிர்க்க முடியாது.பணப்பற்றாக்குறைக்கு ஆளாக நேரிடும். இயன்றவரை சிக்கனத்தைக் கடைபிடித்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம், பிரச்னை ஏற்பட்டாலும் ராசியைக் குரு பார்ப்பதால் அமைதிக்கான வழி பிறக்கும். பிடிவாதத்தைக் குறைத்துக் கொள்வதும், நிதானமாகப் பேசுவதும் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவும். மனதில் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் சில இடைஞ்சல்களைச் சந்திப்பீர்கள். அவர்கள் விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சிலசமயம் அவர்களுக்கு உதவி செய்து உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளலாம். கவனம்.தாயின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். அவருடன் கருத்துவேறுபாடும் உண்டாகலாம். புதிய மனையோ, வீடோ வாங்க ஏற்ற காலகட்டம் இதுவல்ல. குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு அதிகமாகும்.குலதெய்வ அருளால் புத்திர பாக்கியம் கிடைக்க யோகமுண்டு. பிள்ளைகள் படிப்பில் பின்தங்கலாம். தகுந்த அறிவுரை கூறி அவர்களை வழிப்படுத்த முயற்சிப்பீர்கள். குழந்தைகளின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.ரோக ஸ்தானமாகிய 6ம் வீடான மீனராசியை எந்த கிரகபார்வையும் கிட்டாததால் உடல்நிலையில் அதிருப்தி ஏற்படும். உஷ்ண சம்பந்தமான பிணிகள் தலைகாட்டலாம். சிலருக்கு ஆபரேஷன் போன்ற சிகிச்சையும் செய்ய நேரிடும். ஆனாலும், மனநிலையில் உற்சாகம் நிலைத்திருக்கும் என்பதால் கடமையாற்றுவதில் தொய்வு உண்டாகாது. 7ம் வீடான களஸ்திர ஸ்தானத்தில் சனி,ராகு பார்வை பதிவதால் குருபலம் இருந்த போதும், திருமண முயற்சியில் தடங்கல்களை எதிர்கொள்வீர்கள். கடந்தகாலத்தில் கணவன், மனைவிக்கிடையே எழுந்த கருத்துவேறுபாடு மெல்ல மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பம் முன்னேற்றப்பாதையில் செல்லும். மற்றவர்களை தேவையில்லாமல் விமர்சித்து எதிரிகளை உருவாக்கிக் கொள்ளும் நிலையுண்டு. இப்பழக்கத்தை விடுப்பது நிம்மதிக்கு வழிவகுக்கும். சுபநிகழ்ச்சிகளை மனநிறைவாக செய்து முடிப்பீர்கள். தந்தையிடமிருந்த கருத்து வேறுபாடு மறைவதோடு உறவும் பலப்படும். பிதுர்சொத்தில் இருந்த பிரச்னை நீங்கி, பாகப்பிரிவினை நடந்தேறும். சுயதொழில் துவங்க விரும்புபவர்களுக்கு அனுகூல சூழ்நிலை உருவாகி நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: புதிய தொழில்நுட்பங்களை அறிந்து செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உற்பத்தி, தரத்தின் அளவை அதிகரிப்பீர்கள். நிறுவனத்தின் நற்பெயர் பரவலாகும். பணவரவில் இருந்த தளர்ச்சி நீங்கி மிதமான லாபம் கிடைக்கும். தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி பெறுகிற யோகம் உண்டு. நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வெளிநாடு சுற்றுலா பயணம் திட்டமிட்டபடி நிறைவேறும்.
வியாபாரிகள்: அதிக மூலதனம் செய்யும் அளவிற்கு ஒரு தொகை கையில் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்து விற்பனையில் முன்பை விட முன்னேற்றம் அடைவீர்கள். லாபமும் பல வகைகளில் நன்மையும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி நிறைவேறும். சிலர் புதிய கிளைகள் துவங்க அனுகூலம் உண்டு. புத்திரர்கள் வியாபாரம் செழிக்க தகுந்த ஆலோசனை தந்து, வியாபார நடைமுறையில் உறுதுணை புரிவர். பாக்கிப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்து உற்சாகத்துடன் செயல்படுவர். குறித்தகாலத்தில் பணி இலக்கு நிறைவேறி நன்மதிப்பு, சலுகைளைப் பெற்றுத்தரும். சிலருக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடந்துகொள்வர். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். வீட்டுச்செலவுக்கு தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நடத்துவர். புத்திரர்களின் படிப்பு திறமை வளர்வது கண்டு மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணிகளை முடிப்பர். அதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி இனிதாக நிறைவேறும். தங்க நகை வாங்குவீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் அடைவர்.
மாணவர்கள்: தடைபட்டிருந்த உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புண்டாகும். கல்விக்கடன், அரசாங்க உதவியோடு படிப்பைத் தொடர்வீர்கள். ஒருமித்த மனதுடன் படித்து அதிக மார்க் பெறுவீர்கள். படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். படிப்புடன் தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாகி தேவையான உதவி வழங்குவர். பெற்றோர் சொல்லும் வார்த்தையை வேதவாக்காக கருதி செயல்படுவீர்கள்.  படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பெற முயற்சி செய்பவர்களுக்கு கவுரவமான பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆதரவாளர்களின் கோரிக்கையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உண்டு. எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். கவுரவமான பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. அரசியல் பணிக்கு புத்திரரின் உதவியும் கைகொடுக்கும். சுற்றுலா பயணம் திட்டமிட்டபடி மேற்கொள்வீர்கள். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் அதிகரித்து தாராள லாபம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் எதிர்பார்த்த பணவரவும் உண்டு. புதிய நிலம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவீர்கள்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் பலன்கள் மேலும் அதிகரிக்கும். நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
பரிகாரப் பாடல்:
கடிகமலம் சூழ்புவியில் மறையவராம்
வாதாவிக் கடிந்து மன்னாற்
படிக்கமல மறவடியார்க் கனம் படைத்தோர்
சீராளற் பயந்த நங்கை
பிடிக்கமலம் காதரிந்து சமைத்தகறி
வயிரவராம் பெருமாற்கீந்தே
அடிக்கமலம் குடிபெறுநற் பரஞ்சோதி
சிறுத்தொண்டர்க்கு அன்பு செய்வாம்.

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Kanni

கன்னி: யானையின் பலம் தும்பிக்கை உங்களின் பலம் நம்பிக்கை!


இனிமையான சுபாவம் கொண்ட கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல்  சஞ்சரித்த குரு, மே28 முதல் 10ம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். அவர் பார்வை 2,4,6ம் இடங்களில் பதிகிறது. சனி ராசிக்கு இரண்டில் உச்சத்தில் இருந்து 4,8,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்று உகந்த நாலாறு எட்டுபத்து ஈறாறில் தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு,தேடிய பொருள் பூமி சேதமாகும் வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடுவாதபித்த ரோகமது வந்து வாட்டும்தாங்கவே தந்தையொடு புத்திரக்கும்தேடிவரும் தீமையது திகில் உண்டாமே! என்கிறது ஒரு வெண்பா.பத்தாம் இட குருவால்  பிரச்னை உண்டு என்று இந்த வெண்பா சொன்னாலும் அவரது பார்வை பலத்தால், உடல்நலமும், ஆயுள்பலமும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பீர்கள். இந்த பிரச்னையும் தற்காலிகமானதே. தடைபட்டு வந்த பணநிலை குருவின் பார்வையால் சீர்படும். வருமானம் அதிகரிப்பதால் சேமிக்கவும் வாய்ப்புண்டு. யாருக்கும் வாக்குறுதி அளிக்காமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத வம்பில் மாட்டிக் கொள்வீர்கள்.சகோதர வகையில் செலவு அதிகரிக்கும். அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனை வழங்குவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். தாய்வழி சொத்து கிடைக்கும். வீடு, வாகனத்தில் மராமத்துப்பணி மேற்கொள்வீர்கள். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மனை, வீடு வாங்கும் முயற்சியில் விடாமுயற்சி தேவைப்படும். சிலர் வீடு கட்டும் வகையில், அகலக்கால் வைத்து பணச்சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் பணத்துக்கு மட்டும் பட்ஜெட்டை தீட்டுங்கள். பிள்ளைகள் படிப்பில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களுக்கு தக்க அறிவுரை கூறி வழிகாட்டுவது அவசியம். அவர்களின் சேர்க்கை விஷயத்தில் எச்சரிக்கை கொள்வது நல்லது. குறிப்பாக, பெண் குழந்தைகள் ஆண் நண்பர்களிடம் பழகுவது தெரிந்தால், பக்குவமாக எடுத்துச் சொல்லி சிக்கலில் இருந்து மீளுங்கள். கடன்பிரச்னையால் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவீர்கள். கடன் பெறும்போது நம்பகமானவர்களை அணுகுவது முக்கியம். உடல்நலனில் அக்கறை தேவை. கடந்த காலத்தில் இருந்து குணமான சில வியாதிகள் தலைதூக்கும். சளி, இருமல் போன்ற பிரச்னைக்கு ஆளாவீர்கள். திருமண முயற்சியில் தடைகளைச் சந்திப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட இடமுண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே வீட்டில் நிம்மதி நிலைக்கும். சனியின் பார்வையால் ஆயுள்பலம் அதிகரிக்கும். ஆனால், உடல்ரீதியான பிரச்னை அவ்வப்போது உருவாகும். எதிரிகளின் தொல்லை மறையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். நண்பர்களின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் தரும்.தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகும். தந்தையின் உடல்நலனுக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணத்தின் போது பணம், பொருட்களை விழிப்புடன் கவனிப்பது நல்லது. பிரதான கிரகங்களான குரு, சனி இரண்டும் சாதகமாக இல்லாவிட்டாலும் யானை தம் தும்பிக்கையை நம்பியிருப்பதைப் போல, நீங்கள் தன்னம்பிக்கையுடன் சாதிப்பீர்கள்.
தொழிலதிபர்கள்: விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே லாபத்தை தக்கவைக்க இயலும். தொழிலாளிகளின் ஒத்துழைப்பும் ஓரளவே கிடைக்கும். நிர்வாகச் செலவைக் கட்டுப்படுத்த போராட வேண்டியிருக்கும். நிர்வாக நடைமுறையை சரியான பாதையில் கொண்டு செல்வதில் சில இடையூறுகளை சந்திப்பீர்கள். லாபம் சுமாராக இருக்கும். கட்டட விஸ்தரிப்பு பணி மேற்கொள்வீர்கள். கடந்த காலத்தில் போட்டியாக செயல்பட்டவர்கள் விலகுவர்.
வியாபாரிகள்: விற்பனையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வீர்கள். சுமாரான விற்பனை, பணவரவு கிடைக்கும். கடந்த காலத்தில் சேர்த்து வைத்த பணம் மூலதன தேவைகளுக்கு பயன்படும். வியாபார நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு வசதியாக புதிய வாகனம் வாங்குவீர்கள். போட்டி குறைந்து வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பும் நிறுவனத்தில் தகுந்த புகழும் பெறுவீர்கள். குடும்பத்தேவைகளை சிக்கன செலவில் நிறைவேற்றுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே, குளறுபடி வராமல் குறித்த காலத்தில் பணிகளை நிறைவேற்ற முடியும். வேலைபளுவால் சிரமம் ஏற்படும். நியாயமாக பெற வேண்டிய சலுகைகள் கூட ஓரளவே கிடைக்கும். வீடு, வாகன கடன் பெற அனுகூலம் உண்டு. சக பணியாளர்களிடம் உங்கள் மீதான நல் அபிப்பிராயம் வளர்ந்து நட்பை பலப்படுத்தும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை அக்கறையுடன் பின்பற்றுவதால் மட்டுமே சிரமம் வராமல் தவிர்க்கலாம். சிலர் ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம் ஆகிய பலன்களை பெறுகிற நிலை உள்ளது.
பெண்கள்: குடும்பப் பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவதுடன் சிக்கனமாக இருப்பதும் அவசியம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில் தடை ஏற்படும். தாய்வீட்டு உதவி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சிலர் கவனக்குறைவாக பணிபுரிந்து ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம். சுயதொழில் புரியும் பெண்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் உற்பத்தி, விற்பனையில் தகுந்த கவனம் கொள்வர். சுமாரான பணவரவு கிடைக்கும். தங்கநகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
மாணவர்கள்: படிப்புக்கான பணவசதி திருப்திகரமான அளவில் கிடைக்கும். ஞாபகத்திறன் வளர்ந்து தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பு, பாசம் உங்களை மகிழ்ச்சிகரமாக்கும். தனித்திறனை வளர்த்து பேச்சுப்போட்டி, விளையாட்டுகளில் பாராட்டு, பரிசு பெறுவீர்கள். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக செயல்படுவர். படித்து முடித்து வேலை வாய்ப்புக்காக முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களிடம் பெற்ற நம்பிக்கைக்கு குறையேதும் வராத அளவில் செயல்படுவது நல்லது. புகழைத் தற்காத்துக் கொள்ள அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். அரசியல் பணியில் புத்திரர்கள் ஓரளவே உதவுவர்.எதிரிகளால் தொந்தரவு எதுவும் வராத நன்னிலை உண்டு. அலட்சியம், கவனக்குறைவாக செய்கிற செயல்கள் கஷ்ட சூழ்நிலையை உருவாக்கும். நடைமுறையை சீராக்குவது நல்லது.
விவசாயிகள்: விவசாயப் பணிகளுக்கு செலவு செய்கிற பணத்தின் அளவு முன்பை விட அதிகரிக்கும். சுமாரான மகசூல் கிடைக்கும். விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் ஓரளவு பணவரவும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் சமரச தீர்வு கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் சிரமங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
பரிகாரப்பாடல்:
கடல்கடைந்து அமுதம் கொண்டு
கலசத்தை நிறைந்தாற் போல்
உடல் உருகி வாய் திறந்து
மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும்என்
கோலாடி குறுகப்பெறா
தடவரைத் தோள் சக்ரபாணீ
சாரங்க வில் சேவகனே!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Simmam

சிம்மம்: நம்ப முடியாது உங்களை வெல்ல முடியாது!


குடும்ப பெருமையை நிலைநாட்டும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் லாப ஸ்தானமான பதினோராம் இடத்திற்குச் செல்கிறார். அவரின் பார்வை 3,5,7ம் இடங்களில் படுவதால் நன்மை உண்டாகும். 3ம் இடத்தில் இருக்கும் சனியின் பார்வை 5,9,12ம் ராசிகளில் பதிகிறது. பெரு பதினொன்றைந் தேழ் பேர்ஒன்பதாம் இரண்டில் தேவகுரு வரில் செல்வம் சிரூர் குதிரை வெண்குடை தீவர்த்தி தருமமும் தானமுண்டு தாய்தந்தை துணையும் உண்டாம் அருமையும் பெருமையுண்டாம் அரசர் சேவையும் உண்டாமே!என்கிறது ஒரு வெண்பா. இதன்படி, நம் வாழ்விலா இப்படி நடக்கிறது என உங்களாலேயே நம்ப முடியாத பலன்கள் நடக்கும். உங்களை யாரும் வெல்ல முடியாது. கடந்தகாலத்தில் சிரமம் கொடுத்து வந்த நோய்நொடி அனைத்தும் விலகி ஆரோக்கியம் மேம்படும். உள்ளத்திலும் புத்துணர்ச்சி மேலோங்கும். குருவருளால் இந்த ஓராண்டும் பொற்காலமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. பணவரவு தடையின்றி கிடைக்கும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அதற்காக அளவுக்கு மீறி வாக்கு கொடுப்பது கூடாது. மனதில் தைரியம் ஊற்றெடுக்கும். இளைய சகோதரர் வாழ்வு உயரும். சகோதரர்களின் பாசமழையில் நனைவீர்கள். அவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நிலை சீர்பெறும். தாயிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். வீட்டிற்குத் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். சிலருக்கு புதியவீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனை, வேண்டுதல் கூட எளிதாக நிறைவேற்றும் வாய்ப்பு அமையும்.தடைபட்டு வந்த திருமண முயற்சி இனிதே நிறைவேறும். சுபநிகழ்ச்சிக்கு உறவினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கருத்துவேறுபாடு மறைவதோடு தம்பதிக்கு இடையே அன்பு மேலோங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு இனிய தருணம் இதுவாகும். வீட்டில் மழலைக்குரல் கேட்கும் காலம் நெருங்கிவிட்டது. பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு விஷயத்தில் எதிர்கால வளர்ச்சிக்காகத் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அலைச்சலால் அடிக்கடி அசதிக்கு ஆளாவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை செலுத்தி உடல்நலத்தைப் பேணுவீர்கள். கடன் பிரச்னையைக் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். ஓரளவு அடைபடவும் வாய்ப்புண்டு. பகைவர் கூட நண்பராக மாறும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியும் அவ்வப்போது கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு.தந்தையின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. அவருக்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். சுயதொழில் புரிவோருக்கு அரசுவகையில் ஆதாயம் உண்டு.
தொழிலதிபர்கள்: உங்களின் தொழில் வளர்ச்சிக்கான அத்தனை முயற்சிகளும் முழு அளவிலான வெற்றியைத்தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து உற்பத்தியின் அளவை அதிகரிப்பீர்கள். லாபம் நன்றாக இருக்கும். நவீன இயந்திரங்களை வாங்குவீர்கள். சக தொழில் சார்ந்தவர் உங்களின் நட்பை பெரிதும் விரும்புவர். தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்கும். புத்திரர்கள் நிர்வாகப்பணிகளில் தகுந்த பயிற்சி பெற்று உதவிகரமாக நடந்து கொள்வர்.
வியாபாரிகள்: அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை திறம்பட நடத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பலமாக கிடைக்கும். விற்பனை அதிகரித்து தாராள பணவரவு பெறுவீர்கள். வாடகை கட்டடத்தில் நிறுவனம் நடத்துபவர் சொந்த இடம் வாங்கி நடத்த அனுகூலம் உண்டு. சக தொழில் சார்ந்தவர் உதவிகரமாக நடந்துகொள்வர். புத்திரர்கள் உங்களின் வியாபார நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவர தகுந்த திட்டங்களை உருவாக்கித்தருவர்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணித்திறமையை நன்கு பயன்படுத்தி குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு பெறுகிற தகுதி உள்ளவர்களுக்கு அனுகூலம் எளிதில் கிடைக்கும். சலுகைகளும் திருப்திகரமாக வந்து சேரும். வீடு, வாகனம் வாங்குவதற்கான பணக்கடன் இனிய அணுகுமுறையால் பெறுவீர்கள். தனியார் துறை பணியாளர்களுக்கு ஓவர்டைம் உள்ளிட்ட சலுகைகள், பயிற்சி பெற வெளிநாடு, வெளிமாநிலம் செல்லுதல் ஆகிய அனுகூலங்கள் உண்டு. சக பணியாளர்களுடன் சுமூக உறவு இருக்கும்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் கணவரின்  கருத்துக்களை மதிப்புடன் ஏற்று நடந்து கொள்வர். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணவசதி திருப்திகரமாக இருக்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. பணிபுரியும் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு பணியை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள், பதவி உயர்வு கிடைக்கும். தங்க நகை வாங்குவீர்கள். சுயதொழில் புரியம் பெண்கள் தாராள பணவசதி கிடைத்து உற்பத்தி, விற்பனையில் அபிவிருத்தி காண்பர். நவீன தொழிற்கருவிகள் வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி இனிதாக நிறைவேறும்.
மாணவர்கள்: லட்சிய மனதுடன் படித்து படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவீர்கள். தனித்திறன் வளர்த்து புகழ் பெறுவீர்கள். பெற்றோர் அதிக அன்பு, பாசத்துடன் தேவையான உதவிகளை வழங்குவர். ஆன்மிக நம்பிக்கை மனதில் வளர்ந்து தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்வீர்கள். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக செயல்படுவர். சுற்றுலா செல்ல அனுகூலம் உண்டு. படிப்பை முடித்து வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு கவுரவமான சம்பளத்தில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: புகழும் அந்தஸ்தும்  பெறுவீர்கள். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைக்கும். எதிரிகள் விலகுகிற அளவில் உங்கள் செயல்பாடுகள் அமையும். புத்திரர்கள் உங்கள் அரசியல் பணிக்கு நல்லமுறையில்  உதவுவர். கவுரவமான பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள்.
விவசாயிகள்: விவசாயப்பணிகளில் மிகுந்த ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பயிர் வளர்க்க தேவையான அத்தனை வசதிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் அதிகரித்து பயிர்களுக்கு நல்ல விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் உபரி பணவரவும் உண்டு. புதிய நிலம் வாங்க அனுகூலம் உருவாகும்.
பரிகாரம்:ராமபிரானை வணங்குவதால் உங்கள் வாழ்வு மேலும் வளம் பெறும்.
பரிகாரப் பாடல்:
சுற்றமெல்லாம் பின்தொடர
தொல்கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும்
கணபுரத்தெண் கருமணியே!
சிற்றவை தன் சொற்கொண்ட
சீராமா தாலேலே!