Showing posts with label கடகம். Show all posts
Showing posts with label கடகம். Show all posts

Wednesday, 16 September 2009

சனிப் பெயர்ச்சி பலன்கள் - கடகம்

கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் அடக்கமாக காணப்படுவீர்கள்.

இதுவரை பாதச்சனியாக அமர்ந்து உங்களை பலவழிகளிலும் அலைக்கழித்த சனி பகவான் 26.09.2009 முதல் 21.12.2011 வரை ராஜயோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் அமர்ந்து, புகழையும், பாராட்டையும் தர உள்ளார்.

வார்த்தையால் வடிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தீர்களே! பட்டகாலிலே படும் என்பது போல அடுக்கடுக்காக அதிர்ச்சிகளைச் சந்தித்தீர்களே! எதிர்பார்த்த வகையில் பணம் வரவில்லையே! சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியவில்லையே! என்று பல வகையில் புலம்பித்தவித்தீர்களே! காவல் நிலையம், நீதிமன்றமென அலைந்தீர்களே! அந்த தர்ம சங்கடத்திலிருந்து விடுபடுவீர்கள்.

சோகமான முகம் மலரும். அழகு, இளமைக் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். மனைவியுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை மூண்டதே! பலநேரங்களில் மௌன யுத்தமெல்லாம் நடத்தினீர்களே!

அந்த அவல நிலை இனி மாறும். இருவரும் மனம் விட்டு பேசுவீர்கள். கலகம் ஏற்படுத்தியவர்களை ஓரங்கட்டுவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். இனி வருங்காலத்திற்காக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். புது வீட்டில் குடி புகுவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தன ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும்.

உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் எதிர்பாராத தன லாபம், வாகன வசதி, பொருள் வரவு யாவும் கிட்டும்.

உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை, சொத்து சேர்க்கை யாவும் உண்டு.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை உள்ள காலக்கட்டத்தில் சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வீண் செலவுகள், அலைச்சல்கள், கவலைகள் வரக்கூடும்.

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் தெரியும். மகளுக்கு கல்யாண பேச்சு வார்த்தை கைக்கூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மூத்த சகோதரி பண உதவி செய்வார். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்தச் செலவில் ஊர் திருவிழாக்களை நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவர். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து திண்டாட வைத்தார்களே! அந்த நிலை மாறும். பகைவனைப் போல் பேசிய பங்குதாரர்கள் பணிந்து வருவர். அரசால் இருந்த கெடுபிடிகள் விலகும்.

உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். உத்தியோகம் தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! எதிலும் திட்டவட்டமான முடிவெடுப்பீர்கள். கசந்த காதல் இனிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளே! சோம்பல், விரக்தி நீங்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

கலைஞர்களே! மனதளவில் பாரட்டி வந்த மூத்த கலைஞர் இனி பொருளளவில் உங்களுக்கு கொடுத்து உதவ முன் வருவார்.

இந்த சனி மாற்றம் கடைகோடியில் தவித்துக் கொண்டிருந்த உங்களை சில கோடிக்கு அதிபதியாக்கும்.